9 ஆக., 2009

மைக்கல்

மைக்கல் ஜாக்ஸனின் பெயரை முதலில் கேட்டபோது அவரை இன்னொரு பாடகராகத் தான்- பத்தோடு பதினொன்றாக- காதலிக்காக ஏங்கும் அல்லது அவளது அழகைக் காமம் கலந்து விமர்சிக்கும் மேற்கத்தைய இளைஞனாகத் தான்-பார்க்கத் தோன்றியது. ஒரு காலகட்டத்தின் விடலைப் பருவத்தினர் அனைவரும் பால். நிறம் மற்றும் பிரதேச வேறுபாடுகளைக் கடந்து அவரைத தமது ஆதர்ஸ நாயகனாக வரித்துக் கொண்டதை காண முடிந்தபோது என்னையும் அவரைப் பற்றி சிறிதளவான கவனம் எடுக்க வைத்தார். " கண்ணாடியில் தெரியும் மனிதனை" க கேள்வி கேட்கும் அவரது பாடலை முதன் முதலாகக் கேட்டபோது மைக்கல் மீது பாசம் ஏற்படத் தொடங்கியது. நிறபேதம், போரின் கொடுமைகள், பிராணி வதை மற்றும் சூழ்ல் மாசடைதல் என அவர் தனது பாடல்களின் ஊடாக இளம் சந்ததிக்கு பல விஷயங்களை சொன்னார். பாப் இசையில் நடனத்தை அவர் புதிய எல்லைகளுக்குக் கொண்டு சென்றார். விடியோ யுகத்தின் வருகையுடன் அவர் மேற்கத்தைய பாப் இசையின் அதியுச்சத்திற்கே சென்றார். அவரது கால்கள் நடனமாடின என்று சொல்வதை விட நடனத்தைக் காவியமாக்கின என்றால் அது மிகையில்லை. பத்து வயதில் பாடத் தொடங்கிய மைக்கல் இறுதியாக ஒரு நாள் தனது மேடைப் பேச்சொன்றில் ரசிகர்களின் அன்புக்கு நன்றி தெவிக்கையில் யாரும் அவரது பேச்சை ஸிரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. அதன் பின்பு அவரது ஓயாமல் ஆடிய உடலுக்கும அன்பைத் தேடிய உள்ளத்திற்கும் பெரும் ஒய்வு தேவைப் பட்டது. ஆனால் ஒரு கறுப்பு இளைஞனின் அபரிமிதமான வெற்றியை வெள்ளை அமெரிக்காவினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர்கள் தமது கைகளிலிருந்த அதிகாரத்தின் மூலம் யார் பலசாலி என்று நிரூபிப்பதிலேயே குறியாயிருந்தனர். மைக்கல் தனித்துப போரிட முடியாமல் தோற்றுப் போனது ஒன்றும் வியப்பல்ல. அவர் மீது சுமத்தப்பட்ட சிறுபிள்ளைதனமான குற்ற சாட்டுக்கள் வெள்ளை அமெரிக்காவின் கொடூர முகத்தை காட்டியது மட்டுமன்றி அவரையும் பெரிதும் பாதித்தது. தன்னை சுவர்களுக்குள் ஒடுக்கிக் கொண்ட மைக்கல் அன்புக்கும் ஆதரவுக்கும் பெருமளவில் ஏங்கியவர். குழந்தைகளை மகிழ்விக்க எதையும் செய்யத் தயாராக இருந்த மைக்கல் அவர்களது சிரிப்பில் பேருவகை கொண்டார். என்றுமே இறவாமல் வாழ விரும்பிய மைக்கல் ஒரு தலைமுறையின் கனவுகளில் நீங்காமல் நிறைந்து நின்றார். மைக்கல் நிச்சயமாக ஒரு யுக புருஷர். மைக்கல் ஜாக்சன் பற்றி தமிழில் வெளிவந்த கட்டுரைகளில் குறிப்பிடக் கூடிய ஒரு கட்டுரை காலச்சுவடு இதழில் வெளிவந்தது. கட்டுரையைப் படிக்க விரும்பும் அன்பர்கள் கீழுள்ள இணைப்பை அழுத்தவும் :
ஆங்கிலத்தில் வெளிவந்த நல்ல கட்டுரையொன்றைப் படிக்கப பின்வரும் இணைப்பை அழுத்துங்கள்:
http://www.nybooks.com/articles/௨௨௯௫௧ படம்: கார்டியன்(லண்டன்)