24 ஜன., 2009

இசையின் புயல்

"சொட்டு நீலம் டோய்..." என்ற அந்த ஒரு நிமிடதி்ற்கும் குறைவாக ஒலித்த விளம்பரப் பாடல், கேட்டபடி நடந்து செல்வோர் அனைவரையும் வயது வேறுபாடின்றி ஒரு கணம் நிற்கவைத்தது. அது நடந்து இன்று இருபத்தைந்து வருடங்களுக்கு மேல் இருக்கலாம். அன்று தமிழ் நாட்டு மக்களை நிற்க வைத்தவர், அறுபது கோடி இந்தியரையும், உலகம் முழுவதும் பரந்திருக்கும் எண்ணற்ற இசை ரசிகர்களையும் நிற்க வைக்கும் நிலைக்கு வந்து விட்டார். தமிழ் நாட்டில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து தன் உழைப்பால் அவர் எட்டிய உயரம் சாமானியமானதல்ல. .இத்தனைக்கும் நான் ஒன்றும் பெரிதாக சாதித்துவிடவில்லை என்று அடங்கிக் கொள்ளும் பண்பு அவரது ஆளுமையின் அழகு. எத்தனை , பரிசுகள் பட்டங்கள் தேடிவந்தாலும் , என் கடன் இசை அமைப்பதே என்றவாறான தோற்றம்.. தமிழ் மக்களின் ஆசிகளால் அவர் இன்னும் நீண்ட காலம் வாழ்ந்து இசையால் உலகின் காயங்களை ஆற்ற வேண்டும்.

15 ஜன., 2009

Slumdog Millionaire

எனக்கு நிறைய இந்திய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களுள் சிலர் தமிழ் நாட்டிலும் பலர் அதற்கு வெளியேயும் பிறந்தவர்கள். அனைவருமே கடின உழைப்பும், சுய முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறையும் கொண்டவர்கள். பிரகாசமான ஒரு எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வைத்து நிகழ்காலம் தரும் மன, உடல் கஷ்டங்களை மிகவும் பொறுமையுடன் சகித்துக்கொள்பவர்கள். பரஸ்பர மரியாதையுடன் பழகக்கூடியவர்கள். பல நண்பர்கள் தீவிரமான அறிவுத்தேடலும் சமுக மாற்றத்தில் கடுமையான அக்கறையும் உண்மையாகவே மனசில் நிரம்பப் பெற்றவர்கள். . "ஏழைக்கு சோறிடாத சமயம் பக்தனுக்கு மோட்சத்தை தர முடியாது" என்று சூழுரைத்த விவேகானந்தரையும், வினோபா பாவேவையும், மஹாத்மா காந்தியையும், ஜெயப்பிரகாஷ் நாராயணையும் தந்த நாடு இந்தியா. உலகம் வியத்த விஞ்ஞானிகளையும், தத்துவ ஞானிகளையும் புரட்சியாளர்களையும் அது தோற்றுவித்தது. அந்த மண் தந்த மகான்களின் பெயர்களைப் பட்டியலிட்டு மாளாது. படம் பார்த்து வெளியே வந்தபோது இந்திய அரசியல்வாதிகள் மீதும், அதிகார வர்க்கத்தின் மீதும் எனது இந்திய நண்பர்கள் மீதும் எனக்கு ஏற்பட்ட கோபத்தையும், அதன் விளைவாக வந்த அழுகையையும் அடக்க முடியவில்லை.. ஏழை இந்தியனாய் பிறந்தால் ஏன் இத்தனை அவலம்? மாற்றுவோர் இங்கே இல்லையா?