4 செப்., 2009

பெத்ரா (Phedre)

காதல் தேவதையின் கடுஞ்சாபம்

'மனிதர்கள் மூன்று விஷயங்களுக்காக (ஒருவரையொருவர்) கொலைசெய்கிறார்கள்: நிலம், பொன், மாது ஆகியவைதான் அந்த மூன்றும்' --பஞ்சாபிய பழமொழி.

பெத்ரா ஏதென்ஸ் மன்னன் தீஸியஸின் பட்டத்து ராணி. தேசாந்தரம் சென்ற மன்னன் நீண்ட நாளாக (ஆறு மாதங்கள்) நாடு திரும்பவில்லை. அவன் இறந்து விட்டதாகவும் பேச்சு அடிபடத் தொடங்கி விட்டது. இந்த நிலையில் மகாராணி பெத்ராவுக்கு தனது கணவனின் மூத்த மனைவியின் மகன் மீது காதல் ஏற்படுகிறது. தனது சொந்த மகனது வாரிசு உரிமைக்கு போட்டியாக இருப்பதாக நினைத்து இத்தனை காலமும் வெறுத்த ஒருவன் மீதும், அதே சமயம் தனது மகனுக்கு சமமான ஒருவன் மீதும் பிறந்து விட்டநியாயம் தவறிய காதலால் ஏற்படும் மன உழைச்சலால் அவதிப் படுகிறாள் பெத்ரா. தனது நெருங்கிய சேவகியிடம் தனது மனக் கஷ்டத்தையும் உடல் அவதியையும் சொல்லிப் புலம்புகிறாள் பெத்ரா.(எனது ஒவ்வொரு அங்கமும் தீயால் பற்றியெரிகிறது. கண்கள் இருட்டுகின்றன. நிற்க முடியாமல் கால்கள் தள்ளாடுகின்றன.. காதல் நோய் ஒரு புலியைப்போல் என்னை இறுகக் கட்டிக்கொண்டு விட்டது`)

தனதுயிர் எஜமானி படும் துன்பத்தைக் கண்டு மனம் வருந்தும் சேவகி இளவரசன் ஹிப்பொலைதஸிடமே அதனைத் தெரிவித்துவிடும்படி ஆலோசனை கூறுகிறாள். அதன்படி இளவரசனிடம் தன் மனதின் பிரச்சனையைத் தெரிவிக்கிறாள் பெத்ரா. இதனைக் கேட்டு அதிர்ச்சியடையும் இளவரசன் அவள் தனது தந்தையின் மனைவி என்பதை நினைவூட்டுகிறான். தனது நிலையை உணரும் பெத்ரா அவனது வாளின் மூலம் தன்னைக் கொன்று விடும்படி மன்றாடுகிறாள். தனக்கு ஏற்பட்ட வெட்கக்கேடான கதியை நினைத்து கலங்குகிறாள்.`காதல் தேவதை என்னைக் கண்டு விட்டாள் என்பதை நான் உணர்ந்து விட்டேன்.- அவள் வெறுப்பவர்களின் வரிசையில் இறுதியாக.. அவளது எரிதழல் பொறியில் நான் வீழ்ந்து விட்டேன்` எனப் புலம்புகிறாள்.

இந்த நிலையில் மன்னன் நாடு திரும்புகிறான். தனது நிலை மன்னனுக்கு தெரிந்தால் தனக்கும் தனது மகனுக்கும் ஏற்படக்கூடிய ஆபத்தை சேவகி மூலம் உணர்ந்து கொள்ளும் பெத்ரா அவளது ஆலோசனைப்படி இளவரசன் தன்மீது மோகித்ததாக மன்னனிடம் சொல்கிறள். அதை நம்பிய மன்னன் இளவரசன் மீது தீராத கோபம் கொள்கிறான். மன்னன் தன்மீது கொண்ட கோபத்திற்கான உண்மைக் காரணத்தை அறிந்த இளவரசன் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறான். பெத்ரா தனது மனசாட்சியின் உறுத்தலை தாங்கிக் கொள்ள முடியாமல் மன்னனிடம் உண்மையைக் கூறிவிட்டு விஷமருந்தி தற்கொலை செய்து கொகிறாள்.

கிரேக்க துன்பியல் நாடகமான பெத்ரா, பதினேழாம் நூற்றாண்டில் பிரெஞ்சு நடகாசிரியரான ழான் ராஸினால் (Jean Racine) மீண்டும் உயிர்ப்பிக்கப் பட்டது. அதன் ஆங்கில மொழிபெயர்ப்பின் வடிவம் அண்மையில் லண்டனில் மேடையேற்றப் பட்டது. இரண்டு மணி நேரமாக நடைபெறும் நாடகத்தில் காதலுக்கும் மனசாட்சிக்கும் இடையில் அகப்பட்டு அல்லலுறும் மகராணி பெத்ராவாக நடித்தவர் தி குயீன் (The Queen) படத்தில் எலிஸபெத் மகராணியை எம் கண்முன்னால் கொ|ண்டு வந்து நிறுத்தி அதற்காக ஒஸ்கார் விருது பெற்ற ஹெலன் மிர்ரென் (Helen Mirren).. நடுத்தர வயது தாண்டிய நிலையில் ஏற்படும் சபலத்தால் அலைக்கழிக்கப் படும் நிலையையும் அதனால் மகாரணியான தனக்கு ஏற்படக்கூடிய களங்கத்தை நினைத்து கலங்குவதையும் அவர் வெளிப்படுத்தும் விதம் எவர் மனதிலும் இரக்கத்தையும் கண்களில் கண்ணீரையும் நிச்சயம் வரவழைக்கும். ஏனைய நடிகர்களும் மிகச் சிறப்பாக நடித்திருந்தாலும், ஹெலன் மிர்ரென் அரங்கில் நிறைய கைதட்டலை பெற்றார். நாடகத்தின் வெற்றிக்கு வசனங்கள் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த நாடகத்தை பார்த்த போது முழுமையாக உணரக் கூடியதாக இருந்தது.

இந்த நாடகத்தின் ஆங்கில விமர்சனங்களைப் படிக்க விரும்புவோர் பின்வரும் இணைப்புக்களை அழுத்துங்கள்:

http://www.guardian.co.uk/stage/2009/jun/12/phedre-theatre-review

http://www.newstatesman.com/theatre/2009/06/love-racine-hughes-phedre

http://www.independent.co.uk/arts-entertainment/theatre-dance/reviews/phedre-national-theatre-london-1705125.html

2 கருத்துகள்:

  1. வாசித்தேன் நண்பா...அருமையாக இருக்கிறது...தொடர்ந்து இணைந்திருப்பேன்..

    பதிலளிநீக்கு
  2. உங்கள் பாராட்டு மனதுக்கு உற்சகத்தை தருகிறது..மிக்க நன்றி நண்பா..

    பதிலளிநீக்கு